சட்டவியல் :சமூகவியல் சிந்தனைப்பிரிவு (Sociology School in Jurisprudence) – பகுதி 2
சமகாலத்தில் சமூக பொறியியல் கோட்பாடு களின் பிரயோகம்
றொஸ்கோ பவுன்ட்டின் சமூகப்பொறியியல் கோட்பாடானது நியதிச்சட்டங்கள், தீர்ப்புச்சட்டங்கள் மூலம் சட்டத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்தது. அண்மையில் அதிகம் விருத்தியடைந்த பொதுநலன் வழக்காடல் வழக்குகளில் நலன்கள் தொடர்பான சமநிலை அதிகளவில் ஆராயப்பட்டுள்ளது. தீர்க்கப்பட்ட வழக்குகளிலிருந்து தனிப்பட்ட நலனுக்கும் சமூக மற்றும் பொது நலனுக்குமிடையே நீதிமன்றங்கள் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்தமையை காணமுடியும்.
சட்டத்தின் நீதியியல் மற்றும் சட்டவியல் ரீதியான பிரயோகத்தின் போது பின்வரும் விடயங்கள் கவனத்திலெடுக்கப்படவேண்டும் என றொஸ்கோ பவுன்ட் கூறியுள்ளார்.
• சட்டத்தின் பிரயோகத்தால் சமூகத்தில் ஏற்படும் விளைவு
• சட்ட முறை தொடர்பான பகுப்பாய்வு
• சட்டத்தின் வரலாறு தொடர்பில் சமூகவியல் பகுப்பாய்வு
• நலன்களை தீர்மானிக்கையில் வழக்குகளின் தனித்துவமான தன்மையை
கருத்திலெடுத்தல்
• சட்டவாக்கம் உருவாக்கப்படமுன்னர் அது தொடர்பில் சமூகமட்டத்தில் ஆய்வு செய்தல்
பொதுவாக சமூகநீதி மறுக்கப்பட்ட தனிநபர் மற்றும் குழுக்களிடையே சமரசத்தை
ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நியதிச்சட்டங்களில் நலன்களை சமரசப்படுத்துதல்
தொடர்பிலான ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்படும் சட்டங்கள் சமூக
சட்டவாக்கம்(Social Legislation) எனப்படும். இது சமூகப்பொறியியல் கோட்பாட்டை
தழுவியது. மேற்படி சட்டவாக்கம் சமமற்ற தன்மைகளை அகற்றி முழு சமூகமும் பயனடையும் படி உருவாக்கப்படுகின்றன. இவை சட்டங்களில் திருத்தங்களாகவோ அல்லது புதிய சட்டங்களாகவோ அறிமுகப்படுத்தப்படும். இவற்றின் மூலம் சமூக அலகின் ஒவ்வொரு தனிநபரும் சமூகநலன்களையும் பாதுகாப்பையும் பெறமுடிகின்றது என சட்டவியலாளர் கோகன் (John Hogan(1957), American Social Legislation) குறிப்பிடுகின்றார். மேலும் சமூக சட்டவாக்கம் மக்களை சென்றடைவதற்கு போதுமான பரப்புரைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் சமூக சட்டவாக்கத்தின் வினைத்திறனான தன்மை நீதித்துறை அதனைக் கையாளும் முறைமையிலும் தங்கியிருக்கும். சமூக நிலைமை, பொருளாதார போக்கு போன்றவற்றினடிப்படையில் நீதிபதிகள் மேற்படி சட்டங்களை
பொருள்கோடல் செய்தல் அவசியமாகும்.
சமூகப்பொறியியல் கோட்பாட்டின் அடிப்படையில் பல நியதிச்சட்டங்கள் தற்போது
உருவாக்கப்பட்டுவருகின்றன. குடும்பச்சட்டம், காணிச்சட்டம், தொழிலாளர் சட்டம், சுற்றாடல் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற பரப்புக்களில் இவற்றின் தாக்கம்
அவதானிக்கப்பட்டுள்ளது.
பலதார திருமணம், சிறுவர் திருமணம், பராமரிப்பு, மகவேற்பு, பாதுகாவல் தொடர்பான
குடும்பச்சட்ட விடயங்களில் இந்த கோட்பாடு அதிகளவில் பிரயோகிக்கப்பட்டது. இலங்கையில் திருமணப்பதிவுகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 16 ஆனது 18 வயதிற்கு குறைந்தவர்கள் திருமணம் செய்ய தடைவிதிப்பதுடன் பிரிவு 18 பலதார திருமணத்தையும் தடுக்கின்றது. மேற்படி ஏற்பாடுகள் தனிநபர் மற்றும் சமூகநலன் தொடர்பில் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றது.
காணிமறுசிரமைப்பு சட்டங்கள் மூலம் அரச காணிகளை காணியற்றோருக்கு விவசாய மற்றும் குடியிருப்பு தேவைகளுக்கு வழங்குதல் முக்கியமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதுடன் சமூகப்பொறியியல் கோட்பாட்டின் முக்கிய அம்சமான சமூகத்தின் அதியுயர் திருப்தியையும் உறுதிப்படுத்துகின்றது. மேலும் வாடகைக்குடியிருப்பாளர் மற்றும் ;காணி சொந்தக்காரர்களுக்கிடையிலான முரண்படும் நலன்களை சமரசப்படுத்தும் சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசியமைப்பு ஏற்பாடுகள் மூலம் பாகுபாடுகளை தவிர்த்தல், சிறுவர் பெண்கள்
நலன்களை முன்னேற்றுதல் தொடர்பில் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12, இந்திய அரசியலமைப்பின் உறுப்பரை 14, 15 போன்றவற்றில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் சமூகத்தில் சமாதானம். நல்லிணக்கம் போன்றவற்றை அடைவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் புதிய கைத்தொழில் சட்டங்கள், தொழில்தருனர் – தொழிலாளி ஆகியோருக்கிடையிலான நலன்களை சமரசப்படுத்துவதிலும் முக்கிய கவனத்தை செழுத்துகின்றது. அவ்வகை சட்டங்கள் சமூகக்கட்டமைப்பில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையின் தொழிலாளர் சட்டங்களில் சமூகப்பொறியியலின் தாக்கம் தொடர்பில் அடுத்தபகுதியில் ஆராயப்படுகின்றது.
பல தீர்ப்புச்சட்டங்களிலும் சமூகப் பொறியியலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. ரனறிஸ்
வழக்கில் (Vellore Citizens’ Welfare Forum v. Union of India and Others, 1996 SCR 241) சுத்தமான காற்று, சுத்தமான நீர், மாசற்ற சுற்றாடலுக்கான உரிமையானது
அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட உரிமையாகும் என இந்திய உச்சநீதிமன்றம் பரந்தளவில் உறுப்பரை 21 ஐ பொருள்கோடல் செய்தது. இங்கு நீதியரசர் தனிநபர் நலனை விட பொதுநலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பை வழங்கியிருந்தார். கான்பூர் ரனறிஸ் வழக்கில் (M.C. Mehta v. Union of India 1987 SCR (1) 819) கங்கை ஆற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் தொடர்பில், குறித்த நீர்நிலையை
பாவிக்கும் மக்களின் நலனும் தனிநபர் நலனும் முரண்படுவதால் சுற்றாடல் மாசடைதலை
தடுக்கும் முகமாக நீதிமன்றம் கட்டளை வழங்கியது.
றத்ளம் முனிசிபாலிட்டி வழக்கில் (Municipal Council, Ratlam v. Shri Vardhichand & Others, 1980 AIR 1622, 1981 SCR (1) 97)சுகாதார வசதிகள் குறைபாடு மற்றும் வீதி மாசடைதலை
தடுப்பதற்கெதிராக பிரதேச மக்கள் குறித்த உள்ளுராட்சி சபைக்கெதிராக வழக்கிட்டபோது தனிநபர் நலன், சமூக நலன் போன்றவற்றை சமரசப்படுத்தும் முகமாக போதுமான வசதிகளை செய்யுமாறு சபைக்கு கட்டளை வழங்கியது.
நவீன கால சட்டவியலில் சமூகப் பொறியியல் கோட்பாட்டின் அடிப்படைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் அது தொடர்பில் விமர்சனங்கள் இருப்பதையும் மறுக்கமுடியாது. “பொறியியல்” என்ற பதம் பாவிக்கப்பட்டமை மூலம் சமூகத்தை தொழிற்சாலையின் பொறிமுறைக்கு ஒப்பிட்ட தன்மையை சிலர் விமர்சிக்கின்றனர். நாகரீகமடைந்த சமூகத்திற்கே இந்த கருத்துருவம் பொருந்தும் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. மேலும் மேற்படி நலன்களை திட்டமாக வேறுபடுத்தமுடியாத தன்மையும் காணப்படுகின்றது. எனவே நடைமுறை வாழ்கையில் இவற்றை
அடையாளப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்துடன் நலன்கள் தொடர்ச்சியாக மாற்றத்திற்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக பொது நலன் மற்றும் சமூகநலன் தொடர்பில் தெளிவான வேறுபாட்டை பவுனட் வழங்க தவறியுள்ளார்.
இலங்கை நியதிச்சட்டங்களில் சமூகப்பொறியியல் கோட்பாடு
இலங்கையிலும் சமூகப்பொறியியல் கோட்பாட்டின் அடிப்படையில் பல நியதிச்சட்டங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவேயுள்ள நியதிச்சட்டங்களில் திருத்தங்களும்
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவை கீழே பட்டியலிப்பட்டுள்ளன.
• 2016 ஆம் ஆண்டின் 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டம்
• 2017 ஆம் ஆண்டின் 19ம் இலக்க நிலைபேறான அபிவிருத்திச்சட்டம்
• 2018 ல் திருத்தப்பட்டவாறான மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம்
• 2018 ல் திருத்தப்பட்டவாறான கடைகள் மற்றும் அலுவலக தொழிலாளர் சட்டம்
• தொழிலாளர் வேலை முடிவுறுத்தல் சட்டத்திற்கமைவாக 2021ல் தொழில்
ஆணையாளரால் வழங்கப்பட்ட கட்டளை
• 2021 ன் 3ம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டவாறான குறைந்த பட்ச வேதனங்கள்
(இந்திய தொழிலாளர்) சட்டம்
• 2021 ல் திருத்தப்பட்டவாறான தொழிற்சாலைகள் சட்டம்
• 2003 ஆம் ஆண்டின் 9ம் இலக்க நுகர்வோர் நலன்கள் அதிகாரசபைச் சட்டம்
• 1995 ல் திருத்தப்பட்டவாறான திருமணப்பதிவுகள் கட்டளைச்சட்டம்
2021 ல் திருத்தப்பட்டவாறான தொழிலாளர் வேலை முடிவுறுத்தல் சட்டம் மூலம் அநீதியான
முறையிலான வேலை நீக்கத்திற்கான இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது. 2021 ல்
திருத்தப்பட்டவாறான தொழிற்சாலைகள் சட்டம் மூலம் தொழிற்சாலைளில் வேலை
செய்வதற்கான வயதெல்லை 14ல் இருந்து 18 ஆக மாற்றப்பட்டது. மேலும் திருத்தப்பட்டவாறான குறைந்த பட்ச வேதனங்கள் (இந்திய தொழிலாளர்) சட்டத்தினால் தொழிலாளர்களின் நீண்டநாள்கோரிக்கையான ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டுள்ளது. 1995ல் திருத்தப்பட்டவாறான திருமணப்பதிவுகள் கட்டளைச்சட்டம் மூலம் 18 வயதிற்கு குறைந்த சிறுவர் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல சட்டங்களில சமூகப் பொறியியல் எண்ணக்கரு உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கு 2018 ல் திருத்தப்பட்டவாறான மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் இதனுடன் தொடர்புபடுத்தி ஆராயப்படுகின்றது.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் 2018ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்10 மூலம் சட்டங்களில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டன. 1985 ல் இருந்து வரும் குறைபாடுகள் களையப்பட்டு நலன்கள் சமரசப்படுத்தப்பட்டமையால் மேற்படி திருத்தங்கள் மூலம் மகப்பேற்று நன்மைகள் தொடர்பான நோக்கெல்லை பரந்துபட்டதாக அமைந்ததால் ஒப்பீட்டளவில் அதிகளவு நன்மைகள் ஏற்பட்டன.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் 2018 ஆண்டின் திருத்தத்திற்கு முன்னர்வரை பிரிவு 3 ன் படி பிரசவத்திற்கு 2 வாரத்திற்கு முன்னரும் பிரசவத்தின் பின் 10 வாரங்கள்
வரையும் முதல் 2 பிள்ளைகளுக்கு மட்டுமே பிரசவவிடுமுறை பெறமுடியும். ஏனைய
பிள்ளைகளுக்கு 6 வாரம் வரையான விடுமுறை காலமே அனுமதிக்கப்பட்டது. இது தாய் சேய் உடல்நலத்தை பேணுவதில் சிக்கல்நிலையை ஏற்படுத்தியது. எனினும் இது 2018 திருத்தத்தின் பின் பிரிவு 3(1)ல் பிரசவ விடுமுறை சகல பிள்ளைகளின் பொருட்டும் பெறமுடியும்.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் பிரசவவிடுமுறை காலப்பகுதிக்குள்
வேலையாளுக்கு உரித்தான ஏனைய விடுமுறைகளும் சேர்த்து கணிக்கப்படாது. 2018
திருத்தத்திற்கு முன்னர் விடுமுறை நாட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் பாலூட்டும் கால இடைவெளி சலுகை முன்னரே காணப்பட்டது. அதாவது இரண்டு தாய்ப்பாலூட்டும் கால இடைவெளிகள் காணப்படவேண்டும். குழந்தைப்பராமரிப்பு நிலையம் வழங்கப்பட்டுள்ளபோது அது 30 நிமிட இடைவெளியாகவும், மேற்படி வசதி வழங்கப்படாதவிடத்து 1 மணித்தியாலமாகவும் இருக்கும். அவ்வாறே இந்த சட்டத்தில் தாயின் அல்லது சேயின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேலைகள் பிரசவத்திற்கு 3 மாதத்திலிருந்து வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பிரிவு 10ல் பிரசவவிடுமுறை காலத்தில் வேலைநீக்க அறிவித்தல் வழங்குதல் தடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கைத்தொழில் சட்டங்களின் திருத்தங்கள் மூலம் தொழில்தருனர், தொழிலாளி ஆகியோருக்கிடையிலான நலன்களை சமரசப்படுத்துவதில் கவனம் செழுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலன்களில் கவனம் செழுத்தப்பட்டுள்ளமை மேற்குறித்த மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தின் திருத்தத்தில் அவதானிக்கமுடியும்.
இதன்மூலம் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதால் சமூகத்தின் தரமும்
உயர்வடையும். நலன்களை சமநிலைப்படுத்தும் எண்ணக்கருவின் இறுதி அடைவு சமூகத்தின் தனிநபர்களின் தேவையை நிறைவேற்றுவதன் மூலம் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புதலே ஆகும். அந்தவகையில் மேற்குறித்த நியதிச்சட்டம் றொஸ்கோ பவுன்டின் சமூகப்பொறியியல் கோட்பாட்டிற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியான திருத்தம் மூலம் மேலும் கோட்பாடு மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.