சட்டவியல் :சமூகவியல் சிந்தனைப்பிரிவு (Sociology School in Jurisprudence) – பகுதி 1

சட்டவியல் :சமூகவியல் சிந்தனைப்பிரிவு (Sociology School in Jurisprudence) – பகுதி 1

அறிமுகம்


சமூகவியல் சிந்தனைப்பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்தினை சமூகத்துடன் தொடர்புபடுத்திஆராய்ந்தனர். சட்டமானது சமூகமட்டத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பிலேயே கவனம் செழுத்தினர். சமூக இயக்கமே நேரடியாக மனித நடத்தைகளை கட்டுப்படுத்துவதால் அதுவே சட்டம் எவ்வாறு அமையவேண்டும் என தீர்மானிக்கும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர்.

சட்டவியலின் சமூகவியல் குழாத்தை சேர்ந்த றொஸ்கோ பவுன்ட் எனும் சட்டவறிஞரின் சமூகப்பொறியியல்(Social Engineering) எனும் கோட்ப்பாடு முக்கியமானது சமூகத்தின் நிகழ்வுகளைக் கொண்டே சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றங்களும் சட்டங்களை அதனடிப்படையிலேயே பொருள்கோடல் செய்யவேண்டுமென்றும் வலியுறுத்தினார். இவர் முன்வைத்த சமூகப்பொறியியல் என்ற கோட்பாடு சட்டத்தை சமூகவியல் நோக்கில் அணுகுதல் தொடர்பில் முக்கியமானதாகும். அதன்படி தொடர்ச்சியான பரிசோதனைகள், அனுபவங்கள் மூலம் திருப்தியடையக்கூடிய சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்பதலையே சமூகப்பொறியியலின் அடிப்படை என்கிறார்.

இதனை மூன்று வகையான நலன்களை சமரசப்படுத்துவதன் மூலமே அடையலாம் என கூறினார். இங்கு சமூகப்பொறியியல் கோட்பாடு, அதன் சமூக பொருளாதார அரசியல் தொடர்பிலான நலன்களை சமரசப்படுத்துவதில் அதன் தற்கால பிரயோகம், சமூகப்பொறியியல் கோட்பாடு தொடர்பிலான விமர்சனம் மற்றும் இலங்கை நியதிச்சட்டங்களில் மேற்படி கோட்பாட்டின் தாக்கம்
போன்றன ஆராயப்பட்டுள்ளன.

சமூகப்பொறியியல் கோட்பாடு


மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற அடிப்படையில் சிறப்பான வாழ்க்கை தரத்தை அடைவதற்கு சமூகத்தின் அமைப்பும் அதன் இயக்கமும் முக்கிய இடத்ததைப்பெறுகின்றது. இங்கு சமூக பொறியியல் என்பதை பிரித்து நோக்குமிடத்து, சமூகம்(Social); என்பது பல தனிநபர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்குவதையும், பொறியியல்(Engineering); என்பது அடையாளப்படுத்தப்பட்ட சமூக அமைப்பின் தரத்தை உயர்த்துவதற்கு செய்யப்படவேண்டிய திட்டங்களையும் குறிக்கின்றது.
றொஸ்கோ பவுன்ட் (Rosco Pound) சட்டத்தின் வளர்ச்சியுடன் சம்பந்தப்படும் சட்டத்தரணிகள், நீதிபதிகள், சட்ட அமைப்புக்கள் போன்றோரின் கடமைகளை பொறியியலுடன் ஒப்பிடுகின்றார். அதாவது ஒரு கட்டடப் பொறியியலாளர் கட்டுமானமொன்றை உருவாக்கும் போது திட்ட வரைபடம்
தயாரிப்பதிலிருந்து, சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் உள்ளீட்டு சேர்மானங்களை தீர்மானிப்பது வரை சகல விடயங்களிலும் கவனம் செழுத்துவார். இங்கு பல மூலகங்கள் தொடர்பில் சமநிலைத்தன்மை பேணப்பட்டால் மட்டுமே சிறந்த கட்டுமானத்தை உருவாக்கமுடியும்.


அவ்வாறே முரண்படும் நலன்களை சமரசப்படுத்துவதன் மூலம் சிறந்த சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாற்றமடையும் சமூகத்திற்கேற்ப சட்டமும் மாற்றமடையவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார். சமூகப்பொறியியல் கோட்பாட்டின் விளைவால் ஒப்பீட்டளவில் தனிநபர்களின் பெரும்பாலான தேவைகளை திருப்திப்படுத்துவதன் மூலம் ஒரு பயனுறுதியான சமூகம் கட்டியெழுப்பப்படும் என நம்புகின்றார்.

இங்கு றொஸ்கோ பவுன்ட் நலன்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தினார். தனிநபர்
நலன்(Individual Interest), பொதுநலன்(Public Interest), சமூகநலன்(Social Interest) ஆகிய பிரிவுகளே அவையாகும்.

மேற்படி நலன்களுக்கிடையிலான எல்லைக்கோடு இறுக்கமானதாக அமையாததுடன் சமூகங்களுக்கேற்ப அவற்றின் சமநிலை விகிதம் மாறுபடலாம்
என்றும் கூறினார். தனிப்பட்ட நலன்கள் என்பது நபரொருவரின் பார்வையில் தேவை, விருப்பம் போன்றவற்றிலிருந்து தோன்றுவதாகும். இது மதிப்பு, அந்தரங்கம், சுதந்திரம், சொத்து உரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கும். பொதுநலன் என்பது அரசு ஒன்றை சட்ட நபராக நோக்கும் போது அதன் தேவை, விருப்பம் ஆகியவற்றிலிருந்து தோன்றுவதாகும். இது அரசின் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு,
சர்வதேச தொடர்புகள், கடல் எல்லைகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கும்.
சமூகக்குழுவொன்றின் தேவை, விருப்பம் அடிப்படையில் சமூக நலன்கள் அமையும். இது பொது சுகாதாரம், மதம் அரசியல் பொரளாதாரம் சார்ந்த சமூக அமைப்புக்களை பாதுகாத்தல், ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கும். இவற்றுள் பொது நலன் மற்றும் சமூக நலன் ஆகியன சில விடயங்களில் ஒன்றுடனொன்று மேற்பொருந்துவதாக அமையலாம்.

இவ்வகை நலன்கள் சாத்தியமான விகிதாசாரத்திற்கேற்ப சமநிலைப்படுத்தப்படும். ஏற்கனவே கூறப்பட்டதற்கமையவாக இதன் இறுதி இலக்காக தனிநபர்களின் சாத்தியமான தேவைகளை அடையக்கூடிய வகையில் சிறந்த சமூகமொன்றை மேற்படி கோட்பாட்டினூடாக அடைதலாகும்.

தொடரும்

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US