ஒருவருக்கு நன்கொடை கொடுத்த பின் அதனை மீள பெற முடியுமா?
அறிமுகம்
நன்கொடை தொடர்பான புதிய நியதிச்சட்டத்தின் முக்கியத்துவத்தை அறிவதற்கு நன்கொடை பற்றிய உரோமன் டச்சு சட்டக் கோட்பாடுகளை ஆராய்தல் அவசியமாகும். உரோமன் டச்சு சட்டத்தின் படி நன்கொடையானது விசேட வகை ஒப்பந்தங்களுள் அடங்கும்.
அசையா சொத்து தொடர்பான நன்கொடை உறுதிகள் மோசடி தடுப்புக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2ற்கமைவாக பதிவு செய்யப்படல் வேண்டும்.
நன்கொடை கைமீட்கப்படமுடியாது எனும் பொதுவான விதி
நன்கொடை கொடுத்தபின் கைமீட்க முடியாது என்பது பொதுவான விதியாக இருந்த போதும் கொடையாளியால் வெளிப்படுத்தப்பட்டிருப்பின் மீளப்பெற முடியும்.
குறித்த உறுதியை நீக்குவது தொடர்பில் புதிய உறுதி எழுதப்பட வேண்டும் (Deed of Revocation). சொந்தப்பொருள், நோக்கம், பூரண கைமாற்றம், ஏற்பு ஆகியன நன்கொடைக்கான தேவைப்பாடுகளாகும்.
கையளிக்கப்பட்ட நன்கொடையை மீளப்பெறுதல் தொடர்பான விதிவிலக்குகளாக கடனாளி ஒருவர் வாழ்வதற்கு ஆகக்குறைந்த சொத்தை வைத்திருக்கும் உரிமையான Beneficium Competentiae ன் பிரயோகம், கடன் கொடுத்தவர்களின் கோரிக்கை, குறிப்பிட்ட நிபந்தனைகளை பின்பற்றாமை (donatio sub modo), பாரதூரமான நன்றியீனம், கொடையளிக்கையில் குழந்தையில்லாமலிருந்து பின்னர் பெற்றோராக மாறுதல் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
பாரதூரமான நன்றியீனம்
நன்கொடை பெற்றவரின் நடத்தையிலிருந்து அவரின் நன்றியீனம் தொடர்பான எண்ணம் ஊகிக்கப்படலாம். இது ஒரு செயல் மூலம் அல்லது பல செயல்களின் தொடராக இருக்கலாம். Krishnaswamy vs. Thillaiyampalan (1959) வழக்கில் பிரதம நீதியரசர் பஸ்நாயக்க நீதிமன்றம் நன்றியீனத்தை சிறிய விடயமாக பார்க்காது என்று கூறியதுடன் குறித்த ஒரு செயலே நன்றியீனத்தை நிரூபிக்க போதும் என்றார்.
Ranaweera Menike vs. Rohini Senanayake (1992) வழக்கில் மகளுக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட நன்கொடை donatio propter nuptias எனும் அடிப்படையில் மீளப்பெறப்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த போதும் நன்றியீனம் அடிப்படையில் மீளப்பெறப்படலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாரதூரமான நன்றியீனம் என்பது கொலை செய்ய சதித் திட்டம், கடுங்காயம் விளைவித்தல், ஆதனத்திற்கு சேதம் விளைவித்தல், இயலாத கொடையாளியை பராமரிக்கத்தவறுதல் போன்றவற்றை உள்ளடக்கும். படிப்படியாக வந்த வழக்குகளின் தீர்ப்புக்களினடிப்படையில் சட்ட நிலைமையில் மாற்றம் ஏற்ப்பட்டது.
அண்மைய வழக்கு தீர்ப்புகளால் ஏற்பட்ட சட்ட நிலை மாற்றம்
Stephan vs. Hettiarachchi (2003) வழக்கில் கொடை மீளப்பெறுதல் தொடர்பாக வெளிப்படையாக உறுதியில் எழுதப்பட்டிருப்பின்; நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் மீளப்பெற முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியது. கொடையாளி கைமீட்பு தொடர்பாக வெளிப்படையாக விளம்பியிருந்தாரா என்பதை கொண்டே அது கைமீட்கப்படக்கூடிய நன்கொடையா என தீர்மானிக்கப்படும். ஆனால் D.B. Wilson vs. Samarawathie (2007) வழக்கில் நீதிமன்ற கட்டளையில்லாமல் கைமீட்கப்படமுடியாத நன்கொடை உறுதிகளை மீளப்பெறலாம் என்ற மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
மேற்படி வழக்கு மேன்முறையீட்டு விண்ணப்பத்தை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்தது. இதன் விளைவாக கொடை பெற்றவர் பாதிக்கப்படுதல், மோசடியான கைமாற்றம் ஏற்பட சாத்தியம் உருவாகுதல் போன்ற காரணங்களால் இந்த தீர்ப்புச்சட்டம் சிக்கல்களை தோற்றுவித்தது. இலங்கையின் சட்ட ஆணைக்குழு இது தொடர்பாக ஆராய்ந்தது.
புதிய நியதிச்சட்டம்
இதன் தொடர்ச்சியாக மேற்குறித்த இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை பாரதூரமான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 2 தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் கட்டளை மூலமாக மட்டுமே இவ் ஏதுவின் கீழ் கைமீட்கலாம்.
பிரிவு 3ன் படி உறுதி நிறைவேற்றப்பட்டதிலிருந்து 10 வருடத்திற்குள்ளும் நன்றியீனமான செயல் நடந்து 2 வருடத்திற்குள்ளும்; வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். வழக்காளியால் தொடுக்கப்பட்ட வழக்கை முடிவுறாத வழக்காக (lis pendens) ஆவணப்பதிவு கட்டளைச்சட்டத்திற்கமைவாக பதியப்படல் வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் வழக்ககள் குடியியல் நடபடிக்கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளுக்கிணங்க ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும்.