பாராளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெறும் ஆசன எண்ணிக்கையை கணிப்பிடும் முறை
விகிதாசார தேர்தல் முறை என்றால் என்ன?
குறித்த ஒரு பிரதேச அல்லது தொகுதி வாக்காளர்களால் அளிக்கப்படும் வாக்குகளை அடிப்படையாக கொண்டு ஆசனங்கள் ஒதுக்கப்படும் முறையைக் குறிக்கும். இந்த எண்ணிக்கை இலங்கையின் தேர்தல் மாவட்டங்களில் உள்ள சனத்தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
விகிதாசார தேர்தல் முறைமை மூலம் 196 பேர் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய ரீதியில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். இது தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் என அழைக்கப்படுவர். எனவே தேர்தலில் மொத்தமாக 225 பேர் தெரிவு செய்யப்படுவர்.
ஆசனங்கள் எவ்வாறு கணிப்பிடப்படும்?
- கட்சிகள் மற்றும் சுயேட்ச்சை குழுக்கள் பெறும் செல்லுபடியான மொத்த வாக்குகள் எண்ணப்படும்.
- மொத்த வாக்குகளில் 5% ற்கு குறைவாக பெறும் கட்சிகள் மற்றும் சுயேட்ச்சை குழுக்கள் ஆசன கணிப்பீட்டுக்கு தகுதியற்றதாக்கப்படும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக ஆசனம் பெறும் கட்சிக்கு ஒரு “போனஸ்’ ஆசனம் கிடைக்கும்
- ஆசனங்கள் இருசுற்றுகளில் கணிப்பிடப்படும்.
எளிய உதாரண விளக்கம்
- ஒரு மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகள் – 500,000 (5% ற்கு மேல் பெற்ற கட்சிகளின் மொத்த வாக்குகள்)
- குறித்த மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 11 எனில் ஒரு ஆசனம் போனஸ் ஆசனமாக கருதப்பட்டு, கட்சிக்கான ஆசன எண்ணிக்கை கணித்தலில் 10 ஆசனம் கருத்தில் எடுக்கப்படும்.
- ஒரு பாராளுமன்ற ஆசனத்துக்கான வாக்குகள் 50000 (500000 ஐ 10 ஆல் வகுக்க வேண்டும்)
முதல் சுற்று
- கட்சிகள் பெற்ற வாக்குகள் : A கட்சி – 210,000, B கட்சி – 115,000, C கட்சி – 120,000 D கட்சி – 55,000
- A கட்சி 4 ஆசனம் (210000/500000), மீதி 10000
- B கட்சி 2 ஆசனம் (115000/500000), மீதி 15000
- C கட்சி 2 ஆசனம் (120000/500000), மீதி 20000
- D கட்சி 1 ஆசனம் (55000/500000), மீதி 5000
இரண்டாம் சுற்று
முதல் சுற்றின் பின்னரும் ஆசனங்கள் மீதமிருப்பின் எஞ்சிய மீதி தொகையில் இறங்கு வரிசைப்படி கட்சிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படும். இங்கு முதல் சுற்றில் 9 ஆசனங்கள் நிரப்பபட்டுள்ளன. எனவே மீதி 1 ஆசனம் இரண்டாம் சுற்றில் கணிப்பிடப்படும். அதன் படி அதிக மீதி கொண்ட கட்சி C அந்த ஆசனத்தை பெறும்.
இறுதியாக கட்சிகள் பெற்ற மொத்த ஆசனங்கள்
- A கட்சி 5 ஆசனம் (4+போனஸ் 1)
- B கட்சி 2 ஆசனம்
- C கட்சி 3 ஆசனம்
- D கட்சி 1 ஆசனம்
விருப்பு வாக்குகள் அடிப்படையில் உறுப்பினர்களை தெரிதல்
குறித்த கட்சியின் வேட்ப்பாளர்கள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இறங்குவரிசைப்படுத்தபட்டு கட்சி பெற்ற ஆசனங்களுக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.