இலங்கையின் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் சட்டங்கள் – பகுதி 1
இலங்கையில் அண்மைக்காலங்களில் சமூக பொருளாதர கட்டமைப்பில் பெண்களின் தொழில்சார் பங்களிப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக உயர்கின்றது. பெண்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில்; 36.4% தொழிலாளர் படையில் உள்ளடங்குகின்றனர். இது ஆண்களின் தொழிலாளர் படையின் பங்களிப்பு வீதத்திலும் அரைவாசியிலும் குறைவாக இருப்பினும் அவர்களில் வேலை வாய்ப்பு வீதம் 92.7% ஆக இருப்பதால், ஆண்களுடன் ஒப்பிடுகையில்; 4.1%மட்டுமே குறைவானது. இலங்கையில் மொத்த வேலையாட்களில் 34.4%பெண்களாவர். பெண் வேலையாட்களில் 38.4% தனியார்துறையிலும், 19.9% அரசதுறையிலும் வேலைசெய்கின்றனர். மிகுதி பெண்கள்; தொழில்; தருனர்களாகவும், சுயதொழில்செய்பவர்களாகவும் உள்ளனர்.
இந்நிலையில் பெண் தொழிலாளர்களின் உரிமைகள் பூரணமாக கிடைக்கப்பெறுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் மற்றும் பகிரங்க சேவையில் இருக்கும் பெண்களின் தொழில்சார் உரிமைகள் தொழில் நியதிச்சட்டங்கள், அரச சுற்றுநிருபங்கள் போன்றவற்றால் ஆளப்படும். அரச ஊழியர்கள் விடயத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுமிடத்து அரசியலமைப்பின் அடிப்படைஉரிமைகள் மீறல் தொடர்பிலும் பாதுகாப்பு பெறலாம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 18-40 வயதிற்கிடைப்பட்ட தாய்மையடைய கூடிய வகுப்பினராக இருப்பதால் மகப்பேற்று நன்மை தொடர்பில் முக்கியத்துவம் உணரப்படடடுள்ளது. பெண்களின் உடல்நல பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கர்ப்பகாலத்தில் வேலை நீக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறல், தாய் சேயிற்கிடையிலான விசேட உறவுமுறையை காத்தல் போன்ற காரணங்களுக்காக மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் முக்கித்துவம் பெறுகின்றது. மகப்பேற்று விடுமுறையும் சம்பளமும்;, பாலூட்டும் கால இடைவெளி, தாய் சேயின் உடல்நலம், தொழில்பாதுகாப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள தொழிற்சட்டங்களில் ஏற்பாடுசெய்யப்பட்ட விடயங்களை ஆராய்வது முக்கியமானது.
மகப்பேற்று உரிமை தொடர்பில் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் முக்கிய கரிசனையை கொண்டிருந்தது. நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக “மகப்பேற்று பாதுகாப்பும் சிறுவர் நலனும்” என்பதை கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச தொழிலாளார் மாநாடுகள் மூலம்; மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில் முதலில் 1919ம் ஆண்டின் 3ம் இலக்க சமவாயமும்; பின்னர் 1952 ஆண்டின் 103ம் இலக்க சமவாயம் மற்றும் 2000 ஆண்டின் 183ம் இலக்க சமவாயம் உட்பட 3 சமவாயங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றைவிட 1952ம் ஆண்டின் 102ம் இலக்க சமூகப்பாதுகாப்பு சமவாயம், 2012ல் வெளியிடப்பட்ட 202ம் இலக்க தேசிய சமூகபாதுகாப்பு தொடர்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகளிலும் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பில்(The Social Security (Minimum Standards) Convention, 1952 (No. 102)ஏற்பாடுகளை உள்ளடக்கியது.
இதில் இலங்கை 103ம் இலக்க சமவாயத்தை 1993ல் ஏற்று அங்கீகரித்தது. மேலும் பரந்தளவிலான பாதுகாப்பை உள்ளடக்கிய 183ம் இலக்க சமவாயத்தை இலங்கை இன்னமும்; ஏற்கவில்லை;. இதனை ஏற்றுகொண்ட நாடுகளில் 103ம் இலக்க(C103 – Maternity Protection Convention (Revised), 1952 (No. 103) சமவாயம் செல்லபடியற்றதாக்கப்பட்டு 183ம் இலக்க சமவாயமே வலுவில் இருக்கும்.
இலங்கையில் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பாக நடைமுறையில் பின்வரும் சட்டங்கள், விதிகள் காணப்படுகின்றது. முதல் இரண்டு சட்டங்களும் தனியார்துறையினருக்கும் தாபனவிதிக்கோவை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை என்பன அரச ஊழியர்களுக்கும்; பொருந்தும்.
- திருத்தப்பட்டவாறான 1939ம் ஆண்டின் 32ம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டம்
இது சகல வர்த்தகத்திலும் சம்பளத்திற்கு பணியாற்றும் பெண்களின் மகப்பேற்று நன்மைகள்; தொடர்பில் ஏற்பாடு செய்யும(Maternity Benefits Ordinance (No. 32 of 1939)(MBO) S21);. வர்த்தகம் என்ற சொல் கைத்தொழில், பணி, வாண்மைத்தொழில், வியாபாரம் போன்றவற்றை உள்ளடக்கும். இவர்களில்; கடை அலுவலக ஊழியர் சட்டத்தால் ஆளப்படுபவர்கள், அமைய வேலையாட்கள், வீட்டு வேலையாட்கள் போன்றோர் உள்ளடக்கப்படமாட்மார்கள். - திருத்தப்பட்டவாறான 1945ம் ஆண்டின் 19ம் இலக்க கடை அலுவலக ஊழியர்; (ஊழியத்தையும் வேதனத்தையும் உறுதிப்படுத்தல்) சட்டம்
இது கடை, அலுவலக ஊழியர்களுக்கு(Maternity Benefits Ordinance (Shop and Office Employees (Regulation of Employment and Remuneration) Act (SOE)S18A) வசதிகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட சட்டமாகும். அதாவது கைத்தொழிற்துறைசாராத வேலையாட்களை இச்சட்டம் உள்ளடக்கும்;. அத்தடன் அமைய வேலையாட்களுக்கும் பொருந்தும். - தாபனவிதிக்கோவை
மகப்பபேற்று நன்மைகள் தொடர்பில் தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் 11 பிரிவு 18ல் 2005ம் ஆண்டின் 4ம் இலக்க சுற்றுநிரூபம் மூலம் உட்சேர்க்கப்பட்டது. இதன் படி அரச மற்றும் நியதிச்சட்ட சபைகளில் வேலைசெய்யும் நிரந்தர, அமைய, தற்காலிக, பயிலுனர் தர அலுவலர்களுக்கு உரித்தாகும். - பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை
இந்த 10/2013 ம் இலக்க சுற்றறிக்கை பல்கலைக்கழகங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்குரியது.
சட்டவாக்கத்தில் மகப்பேற்று பாதுகாப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள்
- மகப்பேற்று விடுமுறையும் சம்பளமும்
103ம் இலக்க சமவாயத்தின் உறுப்புரை 3(2) ற்கமைவாக பெண்களின் பிரசவ விடுமுறைக்காலம் குறைந்தது 12 வாரமாக இருத்தல் வேண்டும். இது 4 ஏற்பாடுகளிலும்; உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் 2018 ஆண்டின் திருத்தத்தின் பின் பிரிவு 3 ன் படி பிரசவத்திற்கு 2 வாரத்திற்கு முன்னரும் பிரசவத்தின் பின் 10 வாரங்கள் வரையும் சகல பிள்ளைகளுக்கும் பிரசவவிடுமுறை பெறமுடியும். இதற்கு முன்னர் முதல் 2 பிள்ளைகள் தொடர்பாக மட்டுமே இந்த உரிமை காணப்பட்டது. இது தொடர்பில் பகுதி 2 ல் ஆராயப்படும். பிரசவத்தின் மூலம்; உயிருள்ள குழந்தை பிறக்காதவிடத்து 6 வார கால விடுமுறைக்கு உரித்துடையவர்கள். முழுமையான 12 வாரத்திற்கோ அல்லது 6 வாரத்திற்கோ வாராந்த சம்பளத்தின் 6/7 பங்கு சம்பளத்தை பெற உரித்துடையவர்கள்.
மேலும் மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 5 ன் படி மாற்றுமகப்பேற்று நன்மைகளை பெற ஏற்பாடு செய்கின்றது. இந்த மாற்று மகப்பேற்று நன்மைகளைப்பெற எஸ்ரேட் தோட்டத்தில் வசிக்கவேண்டும். இதன்படி பிரசவ விடுதி வழங்கபடல், 10 நாட்களுக்கு குறையாமல் அதில் தங்க அனுமதிக்கப்படல் மற்றும் குறித்த காலப்பகுதிக்கு இரவு உணவு வழங்கல், பிரசவத்தின்போது மருத்துவ தாதியின் சேவை வழங்கப்படல், மகப்பேற்று நன்மைக்கான கொடுப்பனவில் 4/7 பங்கை பணமாக கொடுக்க வேண்டும் போன்ற மேலதிக நன்மைகளை உள்ளடக்கியது.
மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தில் பிரசவவிடுமுறை காலப்பகுதிக்குள் வேலையாளுக்கு உரித்தான ஏனைய விடுமுறைகள் உள்ளடங்காது. 2018 திருத்தத்திற்கு முன்னர் இந்த நிலைமை காணப்படவில்லை. 2018ல் திருத்தப்பட்டவாறான கடை மற்றம் அலுவலக ஊழியர் சட்டத்திலும் இதனையொத்த ஏற்பாடுகளே காணப்படுகின்றன.
தாபனவிதிக்கோவையில் ஏனைய இரு சட்டங்களை விட மேலதிக சலுகைகளை அறிமுகப்பத்தியுள்ளது. அதன் படி பிரசவத்திற்கு முன்னரான 14 நாட்களும்; பிரசவத்தின்பின் 70 நாட்களும் விடுமுறை பெறமுடியும். இந்த 84 நாட்களுக்கும் சம்பளம் முழுமையாக வழங்கப்படும். இது வேலை நாட்களை மட்டும் உள்ளடக்கியது. மேலும் தேவைப்பட்டால் தொடந்;துவரும் 84 நாட்களும் அரைச்சம்பள விடுமுறை பெறமுடியும். அத்துடன்; மேலும் 84 நாட்களும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையை பெறலாம். மேலே குறிப்பிட்ட அரைச்சம்பள, சம்பளமற்ற பிரசவ விடுமுறை நாட்களுள் வாரஇறுதி வேலை நாட்கள் உட்பட ஏனைய விடுமுறைகளும் சேர்க்கப்படும். உயிருள்ள பிறப்பு நிகழாதவிடத்து 6 வார சம்பள விடுமுறை பெறலாம்.
இந்த 10/2013 ம் இலக்க சுற்றறிக்கை படி பல்கலைக்கழகங்களில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் 84 நாட்கள் சம்பள விடுமுறையை பெற உரித்துடையவர்கள். இந்த நாட்களுக்குள் வாரஇறுதி, விடுமுறைநாட்கள் உள்ளடங்காது;. உயிருள்ள பிறப்பு நிகழாதவிடத்து 6 வார சம்பள விடுமுறை பெறலாம்.
103ம் இலக்க சாசனததின் உறுப்புரை 3(5) படி கர்ப்பம் காரணமாக ஏற்படும் நோய் நிலைமைகளுக்கு மேலதிகமாக விடுமுறை வழங்கலாம்; என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இலங்கை சட்டங்களில் ஏற்பாடுகள் காணப்படவில்லை. எனினும் பல்கலைக்கழக வேலையாட்களுக்கு குழந்தையின் அசாதாரனநிலை, பிரசவம் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் போன்ற காரணங்களின் அடிப்படையில் 6 மாதம் வரை சம்பளமற்ற விசேட விடுமுறையை பெறலாம்.
183ம்இலக்க சமவாயத்தில் மகப்பேற்று விடுமுறை 14 வாரங்கள் வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2020ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூகப்பாதுகாப்பு கோவையில்(The Code on Social Security, 2020 No. 36 OF 2020) பெண் வேலையாட்கள் முதல் 2 பிள்ளைகள் வரை 26 வாரம் வரை மகப்பேற்று நன்மைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பிள்ளைகளுக்கு 12 வாரங்கள் வரை விடுமுறை பெறலாம். பிரசவத்தின் பின்னரான கட்டாய விடுமுறை காலமும் குறைந்துத 8 வாரம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு 3ம் இலக்க 2006 பொதுநிர்வாக சுற்று நிருபம் மூலம் தந்தைமை விடுமுறையாக 3 வேலை நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தொடரும்