நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 3

நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 3

நீதிமுறை மீளாய்வு கோட்பாடு

நீதிமுறை மீளாய்வு கோட்பாடானது நிர்வாகச் சட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மீளாய்வு உள்ளார்ந்த நியாயாதிக்கமாவதுடன் மேன்முறையீடானது நியதிச்சட்டத்தில் கூறப்பட்டால் மட்டுமே பிரயோகிக்கமுடியும். நியதிச்சட்டம் அல்லது நிர்வாக நியாயசபை, நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்புக்கு அமைவானதா என ஆராயும் முறையே இதுவாகும்.

மார்பரி வழக்கில் இக்கோட்பாடு முதன்முதலாக அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. சில வகையான சர்ந்தப்பங்களில் இம்முறை மட்டும் மூலமே நிவாரணத்தை பெற்றுக்கொள்ளமுடியுமென்பது நீதிமுறை மீளாய்வின் விசேட அம்சமாகும்.

நீதிமுறை மீளாய்வானது தனியே வழக்காளியின் சார்பாக மட்டும் நோக்கப்படாமல் சமுகத்தின் நலன் அடிப்படையில் நீதிமன்றங்களால் பகுப்பாய்வு செய்யப்படும்.

மனித உரிமை கடப்பாடுகள், நிர்வாகத்துறையினரின் அடிப்படைக் கொள்கைகள், பொது நம்பிக்கை கோட்பாடு ஆகியவற்றில்;; நீதிமுறை மீளாய்வு தங்கியிருக்கும். இங்கிலாந்தில் மனித உரிமைகள் ; சட்டத்திற்குள் ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான சமவாயத்தின் ஏற்பாடுகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

நீதிமுறை மீளாய்வின் போது மேற்குறித்த சமவாயத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக இருக்கின்றனவா என சோதிக்கப்படும். நீதியரசர் டிப்லொக் நீதிமுறை மீளாய்வின் அடிப்படைகளாக சட்டமுரணான தன்மை (Illegality), நியாயமற்ற செயல் (Irrationality), நடைமுறை குறைபாடுகள் (Procedural Impropriety) ஆகியவற்றை மீள வகைப்படுத்தினார்.

இலங்கையின் பாராளுமன்றத்தால் சட்டமாக்கப்பட்டபின்னர் அதனை மீளாய்வுக்குட்படுத்தமுடியாது. ஆனால் சட்டமூலங்களையும், கையளியதிகாரத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நீதிமன்றம் சவாலுக்குட்படுத்தமுடியும்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 17, 126 ஆகியவற்றினடிப்படையில் நிர்வாகத்துறை அல்லது நிறைவேற்றுத்துறை அடிப்படை உரிமைகளை மீறும் போது உயர்நீதிமன்றில் வழக்கிடலாம்.

உறுப்புரை 126ற்கமைவாக சவாலுக்குட்படுத்தப்பட்ட ஜெயவர்த்தன வழக்கில் விளக்கத்திற்கு அழைக்காமல் மரணவிசாரணை அதிகாரியொருவரை பதவி நீக்கியமை இயற்கை நீதி மீறல் என தீரத்தது. பண்டார வழக்கில் காரணங்களை கூறாமல் பதவியிலிருந்து நீக்கியமையும் உறுப்புரை 12(1) மீறல் எனப்பட்டது.

இதனையொத்த தீர்ப்பு தென்னக்கோன் வழக்கிலும் வழங்கப்பட்டது. இங்கு அரசியமைப்பின் உறுப்புரை 55(5) மூலம் அலுவலர்களின் நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு, ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக பகிரங்க சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய முடிந்தாலும் உயர்நீதிமன்றிலும் அடிப்படைஉரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டது.

மேற்குறித்த வழக்குகளிலிருந்து அரசாங்கத்தின் நிர்வாக நிறைவேற்று துறையினரின் வரம்புமீறல் தொடர்பாக பொதுமக்கள், பாதிக்கப்பட்ட அரச ஊழியர்கள் தீர்மானங்களை கேள்விக்குட்படுத்தமுடியும்.

தற்றுணிபு குறித்த வரையறைக்குள் பிரயோகிப்பதை உறுதிப்படுத்துதலில் நீதித்துறை தற்றுணிபு அதிகாரத்தை பிரயோகிக்கத்தவறுதல், தற்றுணிபு அதிகாரத்தை துஷ்பிரயோகம் என இரண்டு முக்கிய வழிகாட்டும் விதிகளை விருத்தி செய்துள்ளன.

டாடா செலுலர் வழக்கில் தற்றுணிபு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்ற அடிப்படை மிகமுக்கியமான ஒன்று என கூறப்பட்டது. கண்ணா வழக்கில் அரச அலுவலரொருவருக்கு குற்றப்பத்திரிகை ஒருதலைப்பட்சமாகவும் தீங்கெண்ணத்துடனும் (Bad Faith) வழங்கப்பட்டதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத போது தற்றுனிபு அதிகாரத்தை பயன்படுத்துதல் முறையற்ற வகையில் அதிகாரத்தை செயற்படுத்துதல் எனப்படும்.

பொதுநலனுக்காக உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி தனியார் நலனுக்காக கையகப்படுத்தியமை தவறு என கூறப்பட்டது. கீழ்த்தர உள்நோக்கம் (Ulterior Motive), முறையற்ற நோக்கம் (Improper Purpose) போன்ற காரணங்களினடிப்படையில் தற்றுணிபு பிரயோகிக்கப்படின் அத்தீர்மானங்கள் வலுவிகழ்தலாகும்.

தர்க்கமுரண்பாட்டுக் கோட்பாடு

தர்க்கமுரண்பாட்டுக் கோட்பாடு நிர்வாகச்சட்டத்தில் தவிர்க்கமுடியாத அடிப்படையாகும். தீர்மானமானது தர்க்கமுரண்பாடாக அல்லது காரணமின்றி இருக்கின்றது என்ற அம்சம் நீதிமுறை மீளாய்வில் முக்கியமானதாகும். வெட்னஸ்பரி வழக்கில் தர்க்கமுரணாக தோன்றும் நிர்வாக அதிகாரசபையின் தீர்மானங்கள் வெற்றானதாகும் என தீர்க்கப்பட்டது.

மேலும் வெட்னஸ்பரி வகையமானது (Wednesbury Unreasonableness) நிர்வாகத்துறைக்கு அளிக்கப்பட்ட தற்றுணிபு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகையை கண்டறியும் முறையென நீதியரசர் கிரேனி கூறினார்.

நிர்வாகத்துறையனரின் தீர்மானத்தை அது தர்க்கமுரணாணதா அல்லது காரணங்களுடன் கூடிய தீர்மானமா என்பதை நீதிமன்றம் ஆராய்கையில் அத்தகைய தீர்மானத்தில் உள்ள நல்ல அம்சங்களை கருத்திலெடுக்காது.

லியனகே வழக்கில் அவசகால ஒழுங்கு விதிகள் அரசியலமைப்பு உறுப்புரை 14ல் உறுதிப்படுத்தப்பட்ட வெளிப்படுத்துதலுக்கான உரிமையை தடுத்தமை தகுந்த காரணமாக கூறப்பட்டது.

முறையான எதிர்பார்ப்பு கோட்பாடு

முறையான எதிர்பார்ப்பு கோட்பாடானது அரசாங்கத்தால் உருவாக்கப்படும் முரண்பாடுடைய கொள்கைகளின் சட்டவலிதுடைமையை இனங்காண்பதற்காக நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்திய வழக்கொன்றில் முறையான எதிர்பார்ப்பானது வாய்மூல அல்லது எழுத்து மூல உடன்படிக்கை அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் உருவாகின்றன எனப்பட்டது. ஏற்கனவே அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் மீள புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்தல் முறையான எதிர்பார்ப்பு எனப்பட்டது.

சுரேந்திரன் வழக்கில் வெவ்வேறு காலப்பகுதியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைகளிலிருந்து பல்கலைக்கழக தெரிவு இடம்பெறும் போது அவ்விரு தொகுதியினரிடையே பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பது முறையான எதிர்பார்ப்பாக ஏற்கப்பட்டது.

ஆட்சேர்ப்பு திட்டமொன்றில் பட்டதாரியல்லாத எழுதுவினைஞர்கள் கவனத்திலெடுக்கப்படாமை முறையான எதிர்பார்ப்பை மீறியதாக தீர்க்கப்பட்டது.

நிர்வாக அதிகாரசபைகள் தமது தற்றுணிபை பிரயோகிக்க தவறுமிடத்து, முறையற்ற கையளிப்பு, அதிகாரத்தை துறத்தல், கட்டளையின் கீழ் செயற்படாமை, இறுக்கமான கொள்கைகளால் ஆளப்படல், ஒப்பந்தக்கடப்பாடுகள் போன்றவற்றின் விளைவாக தற்றுணிபை பிரயோகிக்க தவறுமிடத்து அதனைகட்டுப்படுத்தி ஒழுங்கமைக்கும் பொறுப்பை நீதித்துறை செய்யும்.

(இறுதி பகுதி அடுத்து வெளிவரும்)

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US
K. Yugawendra, Lawyer in Jaffna
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.